68 அடியை எட்டியது வைகை அணை நீர்மட்டம் : மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை …

                                                                வைகை அணை

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் பெரியாறு அணையின் நீர்வரத்து 10707 கனஅடியாக அதிகரித்தது.

இதனால் 122 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 127.20 அடியாக அதிகரித்தது. இதேபோல் வருசநாடு மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் மூலவைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக வைகை அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 67.69 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 2885 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 69 கனஅடிதண்ணீர் திறக்கப்படுகிறது. நீர்இருப்பு 5246 மி.கனஅடியாக உள்ளது.

71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 68 அடியை எட்டும்போது முதற்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்படும். அதன்படி தற்போது தேனி, திண்டுக்கல் மாவட்ட கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு முதற்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்ட்டுள்ளது. 69 அடியை எட்டும் போது 2-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கையும், 70அடியை எட்டும் போது 3-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படும்.

தற்போது தொடர் மழை பெய்து வருவதாலும், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாலும் பொதுப்பணித்துறையினர் 24 மணிநேர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரியாறு அணையின் நீர்மட்டம் 128.20 அடியாக உள்ளது. வரத்து 5276கனஅடி, திறப்பு 767 கனஅடி, இருப்பு 4309மி.கனஅடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, வரத்து 434 கனஅடி, திறப்பு 70 கனஅடி, இருப்பு 435 மி.கனஅடி.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.16 அடி, வரத்து 495 கனஅடி, திறப்பு 30 கனஅடி, இருப்பு 101.11 மி.கனஅடி.