கள்ளக்குறிச்சி அருகே நிறைமதி குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் திருஞானசம்பந்தம் (வயது 39). விவசாயி. இவருடைய மனைவி கீர்த்தனா. இவர்களுடைய மகள்கள் ரிஷிகா (5), அமுதினி (2). கடந்த சில நாட்களுக்கு முன்பு திருஞானசம்பந்தம் தனது மனைவி மற்றும் குழந்தைகளை தியாகதுருகத்தில் உள்ள தனது மாமியார் வள்ளி(40) வீட்டில் விட்டு சென்றார். வள்ளி மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டவுடன் கீர்த்தனா தனது குழந்தைகள், தம்பி கார்த்திகேயன் மற்றும் தாய் வள்ளியுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். நேற்று காலை கீர்த்தனா எழுந்து பார்த்தபோது அருகில் படுத்திருந்த தனது குழந்தைகள் அமுதினி, ரிஷிகா மற்றும் தாயார் வள்ளியை காணாததால் அதிர்ச்சியடைந்தார். அவர் அப்பகுதி முழுவதும் தனது தாயார் மற்றும் 2 மகள்களையும் தேடி அலைந்தார். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் வள்ளி அவரது வீட்டின் மாடியில் இருப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்து கீர்த்தனாவுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கே சென்ற கீர்த்தனா, அவரிடம் தனது குழந்தைகள் குறித்து விசாரித்தார். அப்போது அவர் 2 குழந்தைகளையும் உதயமாம்பட்டு சாலையோரம் உள்ள ஒரு கிணற்றில் வீசி விட்டதாக கூறியுள்ளார். இதைக்கேட்ட கீர்த்தனா அதிர்ச்சி அடைந்து கிணற்றை நோக்கி ஓடினார்.
இதற்கிடையே இது பற்றி தகவல் அறிந்த தியாகதுருகம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி 2 சிறுமிகளையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் சிறுமிகள் ரிஷிகா, அமுதினி ஆகியோரை அவர்கள் பிணமாக மீட்டனர். இதையடுத்து அவர்களின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திருஞானசம்பந்தம் போலீசில் புகார் அளித்தார். அதில் தனது மாமியார் வள்ளி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டால் இறந்துவிடுவார்கள் என்பதை அறியாமல் செய்துவிட்டார் என்றும் தெரிவித்திருந்தார்.
அதன்பேரில், கொலை இல்லாத மரணம் விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வள்ளி மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இருப்பினும் 2 பேத்திகளை பாட்டியே கிணற்றில் தூக்கி வீசிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.