கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான இரா.குமரகுரு எம்.எல்.ஏ. திருக்கோவிலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எந்த பகுதியாக இருந்தாலும் நேரில் சென்று நிவாரணம் வழங்கியுள்ளேன். இடையில் ஏற்பட்ட சிறு உடல்நலக்குறைவு காரணமாக இந்த பணி தொய்வடைந்தது. தற்போது இறைவன் அருளாலும், கழக தொண்டர்களாகிய உங்களது அன்பாலும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளேன்.
மருத்துவர்கள் அறிவுரைபடி ஓய்வு எடுத்து தற்போது மீண்டும் நிவாரணம் வழங்கும் பணியை தொடங்கியுள்ளேன். முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவின்பேரில் இந்த பணி தொடரும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பி ஓய்வு எடுத்து வரும் 470 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் பாதிக்கப்பட்ட நபர்களின் வருமானம் மற்றும் குடும்ப வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு ஒரு குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை, காய்கறி, அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கிவருகின்றேன். எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாத ஏழை, எளிய மக்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தை அணுகலாம். இதற்கு கட்சி பாகுபாடு பார்க்கப்படுவதில்லை. ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் இந்த நிவாரண உதவிகள் வழங்கப்படும். இதுதொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகி இளந்திரையன் என்பவரை 8189892380 என்ற செல்போனில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.