வைரலாகும் சிக்னல் ஆப் பற்றிய போலி செய்தி …

வாட்ஸ்அப் செயலியின் பிரைவசி பாலிசி மாற்றம் உலகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பலர் இனி வாட்ஸ்அப் வேண்டாம் என்ற முடிவில் சிக்னல், டெலிகிராம் என பல்வேறு செயலிகளை பயன்படுத்த துவங்கி விட்டனர்.

சிக்னல் ஆப் பற்றி வைரலாகும் பகீர் தகவல்

                                                                    சிக்னல்
கடந்த சில நாட்களாக சிக்னல் மற்றும் டெலிகிராம் செயலிகளின் பயனர் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சிக்னல் செயலியை உருவாக்கியது உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஏழை தாயின் மகன் என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமஸ்கிருத மொழி கொண்டு முதல்முறையாக இந்த செயலியின் குறியீடுகள் எழுதப்பட்டு இருப்பதாகவும், இதற்கு நாசா மற்றும் யுனெஸ்கோ இணைந்து 2021 சிறந்த புதிய செயலி எனும் விருதை வழங்கி இருப்பதாக வைரல் தகவல்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், அது ரெடிட் தளத்தில் பதிவிடப்பட்ட நகைச்சுவை பதிவு என தெரியவந்துள்ளது. பலர் இந்த பதிவு உண்மை என கூறி சமூக வலைதளங்களில் இதனை பகிர்ந்து வருகின்றனர். உண்மையில் சிக்னல் செயலியை சிக்னல் பவுன்டேஷன் எனும் தொண்டு நிறுவனம் உருவாக்கியது ஆகும்.
சிக்னல் செயலியை அமெரிக்காவை பூர்விகமாக கொண்ட ப்ரியன் ஆக்டன் மற்றும் மொக்சி மர்லின்ஸ்பைக் என இருவர் இணைந்து உருவாக்கினர். இந்த செயலியின் நிர்வாக குழுவில் ஒரு இந்தியர் கூட இடம்பெறவில்லை.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.