லடாக் பகுதியில் சீன ராணுவ தாக்குதலில் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்தநிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனியின் உடல் நேற்று டெல்லியில் இருந்து விமான படையின் சிறப்பு விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து பழனியின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களும் நேற்று மாலை ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு வந்திருந்தனர். நள்ளிரவு 11.30 மணி அளவில் பழனியின் உடலானது விமானம் மூலம் மதுரை வந்தடைந்தது.
இதனை தொடர்ந்து பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் அவரது உடல் மதுரை விமான நிலைய ஆம்புலன்ஸ் மூலம் பழனியின் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று காலை பழனியின் உடலுக்கு குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் இறுதி சடங்கு நடைபெற்றது.
அதன் பின்னர் வீட்டிற்கே அருகே உள்ள சொந்த நிலத்தில் பழனியின் உடலுக்கு முப்படை வீரர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.