முகநூலில் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி!!

தேனி அருகே முகநூலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்

தேனியை சேர்ந்த வாலிபர் ஒருவர் முகநூலில் கணக்கு வைத்துக்கொண்டு, பெண்களுக்கு நட்பு அழைப்பு கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். அழைப்பை ஏற்காத பெண்களுக்கு அவர் முகநூலில் உள்ள ‘மெசேஞ்சர்’ என்ற செய்திகள் அனுப்பும் செயலி மூலம் ஆபாசமாக பேசி ஆடியோ பதிவுகளையும், வீடியோக்களையும் அனுப்பி வந்துள்ளார்.

அவ்வாறு திண்டுக்கல்லை சேர்ந்த பெண் ஒருவருக்கு அந்த வாலிபர் முகநூலில் நட்பு அழைப்பு கொடுத்தார். மேலும் அந்த பெண்ணின் மெசேஞ்சருக்கு ஆபாச செய்திகளையும், படங்களையும் அனுப்பியுள்ளார். இதனால் அந்த பெண், அந்த வாலிபரின் முகநூல் கணக்கை சோதனை செய்தார். அப்போது அந்த வாலிபர் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண், தேனியை சேர்ந்த தனது தோழியிடம் அந்த வாலிபர் யார் என்பது குறித்து கண்டுபிடிக்குமாறு கூறினார்.

இதனைத்தொடர்ந்து அவரது தோழி, அந்த வாலிபரின் முகநூலுக்கு நட்பு அழைப்பு விடுத்து, தகவல்களை சேகரித்தார். அப்போது அந்த வாலிபர், அவருக்கும் மெசேஞ்சர் மூலம் ஆபாச ஆடியோ, வீடியோக்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அவர், வாலிபரின் வழியிலேயே சென்று அவரை பிடிக்க திட்டமிட்டார். அதன்படி, மெசேஞ்சரில் அந்த வாலிபரை சந்திக்க விரும்புவதாக கூறியுள்ளார். இதையடுத்து அந்த வாலிபர் எங்கு வரவேண்டும், எப்போது வரவேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், உப்புக்கோட்டை என்ற கிராமத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.

அதன்படி அந்த வாலிபர் நேற்று முன்தினம் உப்புக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது அங்கு அந்த பெண், தனது கணவர் மற்றும் மகனுடன் காத்திருந்தார். அப்போது அந்த வாலிபரை, அந்த பெண் அடையாளம் காட்ட அவரது கணவரும், மகனும் சேர்ந்து கையும், களவுமாக பிடித்தனர். மேலும் இந்த தகவல் உப்புக்கோட்டை கிராமத்தில் பரவியது. இதனால் அங்கு ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

இதையடுத்து முகநூலில் பெண்களுக்கு ஆபாச ஆடியோ, வீடியோ அனுப்பியது குறித்து கேட்டு அந்த வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். அப்போது அந்த வாலிபர், இதுபோன்று ஆபாச வீடியோக்களை யாருக்கும் இனிமேல் அனுப்ப மாட்டேன் என்று அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து அவரை பொதுமக்கள் விடுவித்தனர். வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவத்தை சிலர் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.