கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று மட்டும் 1107 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 10 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 79 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதம் உள்ள 67 பேரில் ஒருவர் விழுப்புரம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியிலும், 3 பேர் கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
மேலும் 23 பேர் மருத்துவக் கண்காணிப்பு வசதிகளுடன் கூடிய தச்சூர் பகுதியிலும் 40 பேர் குமாரமங்கலம் பகுதியிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று தொற்று உறுதி செய்யப்பட்ட 10 பேர் மராட்டியத்திலிருந்து வந்தவர்கள் ஆவர். பிற மாநிலங்களிலிருந்து புலம் பெயர் தொழிலாளர்கள் அதிக அளவில் மாவட்டத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வருபவர்கள் அனைவரும் மருத்துவ குழுவினரால் கொரோனா தொற்று பரிசோதனை செய் யப்பட்டு தனிமைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று மகாராஷ்டிராவில் இருந்து வரப்பட்ட 591 பேர் உளுந்தூர்பேட்டையை அடுத்த பாலி கிராமத்தில் உள்ள நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருக்கோவிலூர், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் உளுந்தூர்பேட்டை வட்டம், பாதூர் கிராமத்தில் உள்ள அண்ணாமலை பாலி டெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் தங்கவைக்கப்பட்டு மருத்துவகுழுவினரால் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.