பெண்களை தாக்கும் புற்றுநோய்கள் …

பெண்களை தாக்கும் இரண்டு வகையான புற்றுநோய்கள்

                                                               புற்றுநோய்
பெண்களை இரண்டுவிதமான புற்றுநோய்கள் பெருமளவு தாக்குகின்றன. அவை: மார்பக புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய். உலக அளவில் கணக்கிட்டால் சுவாசப்பகுதியில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு முதலிடத்தில் இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களை மார்பக மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் பிடித்திருக்கிறது.
மார்பக புற்றுநோய் பாரம்பரியத்தன்மை கொண்டது என்று கருதப்படுகிறது. நெருங்கிய உறவினர்களில் யாருக்காவது வந்திருந்தாலும் அதே குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் சூழ்நிலை உருவாகலாம். 12- வயதுக்கு முன்பு வயதுக்கு வந்துவிட்டாலும், 55-வயதுக்கு பின்பு மாதவிலக்கு நிலைத்துப்போனாலும் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். மாதவிலக்கு நிலைத்த பின்பு உடல் எடை அதிகரிக்கும் பெண் களையும் மார்பக புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம்.
கொழுப்பு நிறைந்த உணவுகள், மாமிசங்கள், மது போன்றவைகளை தவிர்ப்பது மார்பகபுற்று நோயை தடுக்கும். கர்ப்பத்தடை மாத்திரைகள், மாதவிலக்கு நாட்களை தள்ளிப்போடுவதற்காக உட்கொள்ளும் மாத்திரைகள், குழந்தையின்மைக்காக சாப்பிடும் மாத்திரைகளில் இருக்கும் ஹார்மோன் தன்மைகள் போன்றவை மார்பக புற்றுநோய் உருவாகுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துவதாக கண்டறிந்திருக்கிறார்கள்.
30 வயதிற்கு பின்பு முதல் முறையாக கர்ப்பம் தரிக்கும் பெண்களும், ஒரு தடவை கூட கர்ப்பமே ஆகாத பெண்களும், 45 வயதைக்கடந்த பெண்களும் இந்த நோய்க்கான எச்சரிக்கை உணர்வினை கடைப்பிடிக்கவேண்டும்.
புற்றுநோய்
மார்பகங்களில் புற்றுநோய் அல்லாத கட்டிகள் ஏதாவது தோன்றியிருந்தாலும், அந்த கட்டிகளை ஆபரேஷன் மூலம் நீக்கியிருந்தாலும் கவனமாக இருங்கள். பிற்காலத்தில் ஒருவேளை அதனால் மார்பக புற்றுநோய் ஏற்படலாம்.
கருப்பை வாய் புற்று நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கருப்பை வாய்ப் பகுதி, பெண்களின் பிறப்பு உறுப்பின் உள்பகுதியில் அமைந்திருக்கிறது. பெண்கள் தாம்பத்ய வாழ்க்கையை ஆரம்பித்து மூன்று வருடங்கள் கடந்த பின்பு, இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ‘பாப்ஸ்மியர்’ பரிசோதனை மேற்கொள்ளவேண்டும். கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இந்த பரிசோதனை மூலம் கண்டறிந்துவிடலாம். 30 வயதைக் கடந்த பெண்கள் வருடத்திற்கு ஒருமுறை ‘பாப்ஸ்மியர்’ சிகிச்சை மேற்கொள்வது நல்லது. 65 முதல் 75 வயதுக்கு உள்பட்ட மூதாட்டிகள் இந்த பரிசோதனையை மேற்கொள்ளவேண்டியதில்லை.
பரிசோதனையில் பாதிப்பு இருப்ப தாக கண்டறிந்தால், அது முதல் நிலை அல்லது இரண்டாவது நிலையில் இருந்தால் 85 முதல் 95 சதவீத நோயாளிகளை குணப்படுத்தி விடலாம். அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்தாலும் குணப்படுத்த வாய்ப்பிருக்கிறது.
ஹுயூமன் பாபிலோமா என்ற ஒருவகை கிருமிகள்தான் இந்த நோய்க்கு காரணம். அவை கருப்பைவாய் திசுக்களை கடந்து சென்று, அந்த திசுக்களில் ஆபத்தான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இது திடீரென்று ஏற்படும் மாற்றமல்ல. பல வருடங்களாக நடப்பதாகும்.
இளம் பருவத்திலே பாலியல் தொடர்பில் ஈடுபடுகிற பெண்கள், இளம் வயதிலே பிரசவிக்கும் பெண்கள் போன்றவர்களுக்கும் இந்த நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.