கச்சிராயப்பாளையம் அருகே உள்ள தாவடிப்பட்டு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் மகன் திருநாவுக்கரசு (வயது 17). இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் தனது வீட்டில் பூனை ஒன்றை செல்லமாக வளர்த்து வந்தார்.
நேற்று மதியம் பூனையை காணாததால் அதை தேடி திருநாவுக்கரசு சென்றார். அப்போது இவரை பார்த்து ஓட முயன்ற பூனை வீட்டின் அருகே சுமார் 100 அடி ஆழம் உள்ள மொட்டை கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த திருநாவுக்கரசு தனது செல்லப்பிராணியை காப்பாற்றுவதற்காக தானும் கிணற்றில் குதித்தார். அப்போது நீச்சல் தெரியாத அவர் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அதோடு பூனையும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது.
இந்தநிலையில் பூனையை தேடிச் சென்ற திருநாவுக்கரசுவை காணாமல் அவரது பெற்றோர் தேடி அலைந்தனர். அப்போது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் பார்த்தபோது அங்கே திருநாவுக்கரசுவும், பூனையும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு அக்கம் பக்கத்தினர் அங்கே திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் இது குறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கினர். ஆனால் அதற்குள் பூனை செத்துவிட்டது. உயிருக்கு போராடிக்கொண்டிருந்த திருநாவுக்கரசுவை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். திருநாவுக்கரசுவின் உடலை பார்த்து அவர்களின் உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
தவறி விழுந்த தனது செல்லப்பிராணியை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்தபோது தண்ணீரில் மூழ்கி மாணவர் பலியான சம்பவம் தாவடிப்பட்டு கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.