துபாயில் புதிய வகை டாக்சி சேவை அடுத்த மாதம் (பிப்ரவரி) முதல் சோதனை முறையில் இயக்கப்படுகிறது.
விபத்து ஏற்பட்டால் அவசர சேவை மையத்துக்கு தகவல் தெரிவிக்கும் வசதி, வைபை வசதி என பல்வேறு நவீன வசதிகள் கொண்டதாக உள்ளது. இந்த டாக்சி சேவைக்கான பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால் 3 மணி நேரம் தொடர்ந்து இயங்கும் திறன் கொண்டது. மேலும் 30 நிமிடத்தில் பேட்டரியை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
இந்த டாக்சியை துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் பொது இயக்குனர் மத்தார் அல் தயார் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகள் அந்த டாக்சியில் உள்ள வசதிகள் குறித்து அவரிடம் விவரித்தனர். தொடர்ந்து அவர் கூறியதாவது:-
துபாயில் லண்டன் நகரில் ஓடும் டாக்சிகள் போல் கருப்பு கலர் டாக்சி சேவையானது மின்சாரம் மற்றும் எரிசக்தியை பயன்படுத்தி இயக்கப்படும் வகையில் அடுத்த மாதம் (பிப்ரவரி) முதல் சோதனை அடிப்படையில் இயக்கப்படுகிறது. இந்த சேவையானது ஆரம்ப கட்டமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
துபாய் நகரில் டாக்சி சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில் இந்த புதிய சேவை இயக்கப்பட இருக்கிறது. மேலும் துபாய் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகளை இந்த புதிய டாக்சி சேவை அதிகமாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற அக்டோபர் மாதம் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி தொடங்க இருப்பதால் இந்த சேவை மேலும் முக்கியத்துவம் பெறும்.