பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தில் பிரீமியம் செலுத்தி இறந்த கூலித்தொழிலாளியின் குடும்பத்தினருக்கு கள்ளக்குறிச்சி அடுத்த மாடூர் யூனியன் பேங்க் ஆப் இந்தியா 2 லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகை வழங்கியது.கள்ளக்குறிச்சி அடுத்த புதுபல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் பாண்டுரங்கன், 42; கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளி. இவருக்கு கடந்த 2005ம் ஆண்டு திருமணமாகி மகாலட்சுமி என்ற மனைவியும், 12 வயதில் ஒரு மகன், 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.இவர் மாடூர் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி (முன்னதாக கார்ப்பரேஷன் வங்கி) கிளையில், கடந்த 2018ம் ஆண்டு பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தில் ஆண்டு சந்தாவாக 330 ரூபாய் செலுத்தி ஆயுள் காப்பீடு செய்திருந்தார்.இந்நிலையில் சிறுநீரக கோளாறு காரணமாக பாண்டுரங்கன் கடந்த மார்ச் 23ம் தேதி இறந்தார். அதனைத் தொடர்ந்து, இன்சூரன்ஸ் தொகைக்கான பிரீமியம் செலுத்தப்பட்டதற்கான காப்பீட்டு தொகை 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, அவரது குடும்பத்திற்கு மாடூர் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையின் முதன்மை மேலாளர் சேஷசாயிகுமார், மேலாளர் மனு மணி ஆகியோர் நேற்று, வழங்கினர்.