கல்வராயன்மலையில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவித்த உலர் உணவு பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்வராயன்மலையில் அரசு பழங்குடியினர் நலத்துறை சார்பில் 26 ஆரம்ப பள்ளிகள்,13 நடுநிலைப் பள்ளிகள், இன்னாடு, கொட்டபுத்துார், மூலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 3 உயர் நிலைப் பள்ளிகள், மணியார்பாளையம் மற்றும் கோமுகி அணை ஆகிய இடங்களில் 2 மேல் நிலைப் பள்ளிகள் உள்ளன.இதில், ஆரம்ப பள்ளிகளில் 1,800 மாணவர்கள், நடுநிலைப் பள்ளிகளில் 1,650 மாணவர்கள், உயர் நிலைப் பள்ளிகளில் 1,204 மாணவர்கள், மேல் நிலைப் பள்ளிகளில் 1,251 மாணவர்கள் என 5,905 பேர் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் படித்து வருகின்றனர்.அனைத்து பள்ளிகளும் உண்டு உறைவிட பள்ளிகளாக இருப்பதால், அனைத்து மாணவர்களும் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க அரசு உத்தரவிட்டது.அதன்படி 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தலா 3.1 கிலோ அரிசி, 1.2 கிலோ பருப்பு ஆகியவையும், 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தலா 4.65 கிலோ அரிசி மற்றும் 1.25 கிலோ பருப்பு ஆகியவை பள்ளி கல்வித் துறை சார்பில் வழங்கப்பட்டது.ஆனால், கல்வராயன் மலையில் உள்ள மாணவர்களுக்கு நலத்துறை சார்பில் எந்த உணவு பொருட்களும் வழங்கப்படவில்லை.
இங்குள்ள நலத்துறை பள்ளிகளில் குறிப்பாக மட்டபாறை, நொச்சிமேடு, மாவடிப்பட்டு உட்பட பல்வேறு பள்ளிகளில் சத்துணவு திட்டம் உள்ளது.அந்த பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் சாப்பிடும் மாணவர்களுக்கு அரசு அறிவித்த உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில் அதே பள்ளியில் படிக்கும் மற்ற மாணவர்களுக்கு அரசு அறிவித்த பொருட்கள் வழங்கவில்லை.கல்வராயன்மலையில் உள்ள மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருந்து வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை நலத்துறை பள்ளிகளில் தங்க வைத்து விட்டு கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கு கூலி வேலைக்குச் சென்று விடுகின்றனர்.இதனால் இங்குள்ள மாணவர்கள் ஆண்டின் பெரும் பகுதி நாட்கள் பள்ளி விடுதிகளை சார்ந்தே இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக விடுதிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் தங்கள் வீடுகளில் தங்கி ஆடு, மாடுகள் மேய்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கால் மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
கொரோனா தொற்று தாக்குதலைத் தடுக்க சத்தான உணவுகளை சாப்பிட சுகாதாரத் துறையினர் மக்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறது.வாழ்வாதாரம் இழந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு 3 வேளை உணவு வழங்குவதற்கே மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களுக்கு சத்தான உணவு என்பது எட்டாக்கனியாக உள்ளதால் மாணவர்களின் உடல் நலம் கேள்விக்குறியாகி வருகிறது.எனவே, நலத்துறை விடுதிகளில், அரசு அறிவித்துள்ள உணவு பட்டியல் படி, பழங்குடியினர் நலத்துறை பள்ளி மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்க கலக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.