நடிகரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர்.104 -வது பிறந்த நாள் !!

தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., பிறந்த தினம் - ஜன.17, 1917

                                                                      எம்.ஜி.ஆர்
நடிகரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர்., 1917-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதே தேதியில் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும், சத்தியபாமாவுக்கும் மகனாக பிறந்தார். இவருடைய இயற்பெயர் மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் என்பதாகும். இவருடைய அப்பா கேரளாவில் வக்கீலாக பணிபுரிந்தார். அவருடைய மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் குடியேறினார்.

குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாததால் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவருடன் சக்ரபாணி என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் அனுபவமான நிலையில் திரைப்படத் துறைக்கு சென்று, தனது அயராத உழைப்பில் முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும்பாலான மக்களை கவர்ந்தது.

அண்ணல் காந்தியடிகளின் கருத்துக்களால் ஈர்க்கப்பெற்று தேசிய முற்போக்கு காங்கிரசில் இருந்த இவர், அறிஞர் அண்ணாவில் அரசியல் கருத்துக்களில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் திமுகவில் இருந்து விலகி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் நின்று தொடர்ந்து 3 முறை தமிழகத்தில் முதலமைச்சராக பதவியில் இருந்தார். இவருக்கு உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது