தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி!!

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசன விழாவில் பக்தர்களுக்கு அனுமதி

                                                             வடலூர்

கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அரசால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கானது பல்வேறு தளர்வுகளுடன் வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் உள்ளரங்கங்களில் நடைபெறும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 100 சதுர மீட்டருக்கு 20 நபர்கள் என்ற விகிதத்தில் அதிகபட்சம் 200 நபர்களும், திறந்த வெளிப்பகுதிகளில் இடத்தின் பரப்பளவுக்கு ஏற்ப அதிகபட்சம் 50 சதவிகிதம் வரையிலான நபர்களும் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு அந்தந்த மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்று பங்கேற்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி கடலூர் மாவட்டம் வடலூர் சத்தியஞானசபையில் வருகிற 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 150-வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவிற்கு மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி அளிக்கப்படுகிறது.

அதனால் விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து, அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன், கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

மேலும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பக்தர்களின் உடல்வெப்ப பரிசோதனை மற்றும் நோய் அறிகுறி குறித்து ஆய்வு மேற்கொண்டு, நோய் அறிகுறியற்ற பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நோய் அறிகுறி மற்றும் உடல் வெப்பம் அதிகமாக இருப்பின், மருத்துவக் குழுவினரால் பரிசோதனை செய்து, நெகட்டிவ் என சான்று பெற்ற பின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
65 வயதுக்கு கூடுதலான மூத்த குடிமக்கள், சுவாச நோய், இருதய நோய், சர்க்கரை நோய், உயர் மற்றும் குறை ரத்த அழுத்தக் குறைபாடு உடையவர்கள், கருவுற்ற தாய்மார்கள் மற்றும் 10 வயதுக்கும் குறைவான குழந்தைகள் ஆகியோர் விழாவில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்.ஜோதி தரிசன நிகழ்ச்சியை டிஜிட்டல் திரைகளில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கருத்தரங்குகள், நாடகங்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது.சத்தியஞானசபை பெருவெளி மற்றும் ஜோதி தரிசனம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் அனைத்து வகை கடைகளுக்கும், ராட்டினம் முதலான பொழுதுபோக்கு செயற்பாட்டிற்கும் அனுமதி கிடையாது. மேலும் ஜோதி தரிசன நாளன்று மது மற்றும் இறைச்சி கடைகளை திறக்கக்கூடாது. இதுதவிர பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவை, பொட்டலங்களாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.