தியாகதுருகம் வாரச்சந்தையை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. இப்பகுதியை ஒட்டி சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ளது.காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை அமைக்க தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது
ஆனால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை நிறுத்தி விற்பனை செய்வதற்கு போதிய இடவசதி இங்கு இல்லை.
இதனால் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இட நெருக்கடியான பகுதியில் ஆடு, மாடுகளை நிறுத்தி விற்பனை செய்து வருகின்றனர்.அதேபோல் கால்நடைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை சாலையை ஒட்டி நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கின்றனர்.
போக்குவரத்து நெரிசல்
இதனால் வார சந்தை நடக்கும் நாட்களில் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிலவிவருகிறது.
இதனை ஒழுங்குபடுத்த போலீசாரும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
இதற்கு தீர்வாக கால்நடை சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதுவரை, வார சந்தை நடக்கும் நாட்களில் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவதை தடுத்திட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.