தமிழகம் முழுவதும் முழு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் அடுத்த 10 நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறதா? இல்லையா? என்பது தெரிந்துவிடும் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் பொது மக்கள் வசதிக்காக பல்வேறு தளர்வுகள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டது.
முக்கியமாக கடந்த 1-ந் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் பஸ் போக்குவரத்து தொடங்கி உள்ளது. வழிபாட்டு தலங்களும் பொது மக்களுக்காக திறக்கப்பட்டு உள்ளன.
மால்கள், பூங்காக்களும் திறக்கப்பட்டு உள்ளன. முக்கியமாக இ-பாஸ் நடை முறையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு தளர்வுகள் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு இயல்புநிலை திரும்பி உள்ளது.
இந்த நிலையில் வருகிற அக்டோபர் மாதம் கொரோனா உச்சத்தை அடையும் என்றும் நிறைய பேர் கொரோனாவால் பாதிக்கப்படும் சூழல் உருவாகும் என்றும், பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பிய கடிதத்தில் நாம் முக்கியமான காலக்கட்டத்தில் உள்ளோம்.
அக்டோபர் மாதம் கொரோனா பாதிப்பு அதிகரிக்காத வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.
இதுகுறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
கொரோனா சம்பந்தமாக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாகவும் பொது மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாகவும் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
70 சதவீதம் பேர் முககவசம் அணியத் தொடங்கி விட்டனர். நோய் பாதித்தாலும் முகாம்களுக்கு வந்துவிடுகிறார்கள். தற்போது கோவை, திருப்பூர், ஈரோடு, கடலூர், திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் அதிகமாகி உள்ளது.
இதை கட்டுப்படுத்த தனி கவனம் செலுத்தி வருகிறோம். தற்போது தமிழகம் முழுவதும் முழு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் அடுத்த 10 நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறதா? இல்லையா? என்பது தெரிந்துவிடும்.
அக்டோபர் மாதத்தில் கொரோனா உச்சத்தை அடையும் என்று சொல்வதெல்லாம் வெறும் யூகம் தான். உஷாராக இருப்பதற்காக சொல்லப்படும் வார்த்தை தான்.
தற்போது தமிழகத்தில் 89 ஆயிரம் பேருக்கு தினமும் பரிசோதனை செய்யும் அளவுக்கு கட்டமைப்பை அதிகரித்து உள்ளோம். அரசு ஒரு பக்கம் கடுமையாக மக்களுக்காக பாடுபடுகிறது. மக்களின் ஒத்துழைப்பும் இதில் அவசியமாகும்.
தெருமுனை கடைகளுக்கு சென்றால் கூட பாதுகாப்பற்ற முறையில் போவதை தவிர்க்க வேண்டும். முககவசம் அணிந்து சென்றாலே நோய் வராமல் தடுத்து விடலாம்.
ஒரு மாவட்டத்தில் கொரோனா குறைந்தால் மற்றொரு மாவட்டத்தில் கொரோனா அதிகரிக்கிறது. இதனால் தான் தினமும் 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக புள்ளி விபரம் வருகிறது. எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாகிறதோ அங்கு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம்.