தங்கம் விலை ரூ.40,000க்கு கீழ் சரிவு : மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது !!

ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 40 ஆயிரத்திற்கு கீழ் சென்றதால் தங்க நகைகளை வாங்குவதற்கு மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

தங்கம் விலை ரூ.40,000க்கு கீழ் சரிவு.. அமெரிக்க டாலர் சரிந்ததன் எதிரொலியா?

அமெரிக்காவில் ஆட்சி மாற்றம், டாலர் மதிப்புச் சரிவின் எதிரொலியாக தங்கத்தின் விலை சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 384 ரூபாய் சரிந்து 39,936 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் சரிந்து வருவதால் சாமானிய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தாண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 41,000 வரை விற்பனையாகி வந்தது. கடந்த 9ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை படிப்படியாக குறைய துவங்கியது.

இந்தாண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை சவரனுக்கு 40,672 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஜனவரி 11ஆம் தேதி 160 ரூபாய் குறைந்து சவரன் 40,512 ரூபாய்க்கு விற்பனையானது. 13ஆம் தேதி சவரனுக்கு 40,368 ரூபாய்க்கு குறைந்தது. நேற்று ஆபரணத் தங்கம் சவரன் 40,320 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 384 ரூபாய் சரிந்து 39936 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது

அமெரிக்க டாலர் மதிப்பு சரிந்துள்ளது பொதுவான காரணமாக பார்க்கப்பட்டாலும், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட துவங்கி உள்ள நிலையில் அதன் எதிரொலியாகவும் தங்கத்தின் விலை சரிந்திப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

பொருளாதாரம் மெல்ல, மெல்ல மீண்டும் வரும் நிலையில், தங்கத்திற்கு மாற்றாக பலர் பிட்காயின் உள்ளிட்டவைகளில் முதலீடு செய்ய துவங்கியதும், தங்கம் விலை சரிவுக்கு காரணமாக பார்க்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.