டெல்லியில் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 9-வது கட்ட பேச்சுவார்த்தை..

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 9-வது முறையாக பேச்சுவார்த்தை நடத்துகிறது.

Ninth-round-of-Talk-Between-Central-Government-and-Farmers-today-those-who-protesting-against-Farm-Bills

 

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து 50 நாட்களுக்கும் மேலாக விவசாய அமைப்புகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றன. விவசாயிகளுடன் மத்திய அரசு 8 முறை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இன்று 9-வது முறையாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

முன்னதாக விவசாயிகள் பிரச்னை தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்த குழுவில் இடம்பெற்றிருந்த பாரதிய கிசான் சங்க தலைவர் பூபேந்தர் சிங் மான் திடீரென விலகியுள்ளார். எப்போதும் விவசாயிகள் பக்கமே இருக்க தான் விரும்புவதாகவும் எனவே உச்சநீதிமன்ற குழுவில் இருந்து விலகிக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றால் மட்டுமே வீடு திரும்புவோம் என்ற உறுதியான நிலைப்பாட்டில் உள்ள விவசாயிகள், இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்போம் என கூறியுள்ளனர். அதேநேரத்தில் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள குழு முன்பு ஆஜராகமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

image

இதனிடையே குடியரசுத் தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணியை நடத்துவது தொடர்பாக விவசாய சங்கங்கள் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. ஒரு பிரிவினர் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என தெரிவித்துள்ள நிலையில், மற்றொரு பிரிவினர் அமைதியான போராட்டத்தை சீர்குலைக்க சதி நடப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் சார்பில், இன்று ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறவிருக்கிறது. டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார்.