சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் ஆண் சடலம்:கொலையாளிகளை தேடும் போலீசார்!!

வாணியம்பாடி அருகே இளைஞரை கொலை செய்து சாக்கில் மூட்டைகட்டி கிணற்றில் வீசி சென்ற கும்பலை ஆலங்காயம் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Male-corpse-rotting-in-sack-Police-searching-for-the-killers

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த மராட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாண்டுராவ். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்திலுள்ள கிணறு, வெள்ளக்குட்டை – நிம்மியம்பட்டு செல்லக்கூடிய சாலையில் உள்ளது. அவ்வழியாக செல்பவர்கள் மற்றும் அருகிலுள்ள விவசாய நிலத்தில் பணிபுரிந்து வருபவர்கள், கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் சாக்குமூட்டை ஒன்று கிடப்பதாகவும் ஆலங்காயம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

image

அதன்பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி சாக்குமூட்டையை கயிற்றின் மூலம் கிணற்றில் இருந்து மேலே கொண்டு வந்தனர். பின்னர் சாக்கு மூட்டையை பிரித்து பார்த்ததில் அழுகிய நிலையில் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

image

இதையடுத்து காவல்துறையினர் உடனடியாக தடயவியல் நிபுணர்களை வரவழைத்து உடல் முழுவதும் பரிசோதனை செய்தனர். பின்னர் அங்குவந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் விசாரணை செய்தார். பின்னர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து ஆலங்காயம் காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட இளைஞர் ஆலங்காயம் பெத்தூர் பால்வாடி தெருவை சேர்ந்த சிவராஜ் என்பவரின் மகன் நாகராஜ் (30) என்பது தெரியவந்துள்ளது. அடித்துக் கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசி சென்ற கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.