சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படுகிறது : நாளை வரை திருவாபரணங்களுடன் ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்கலாம்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகள் பிரசித்தி பெற்றவையாகும். இந்த பூஜை காலங்களில் நடை திறந்திருக்கும் நாட் களில் தினமும் லட்சக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.
கொரோனா காரணமாக முதலில் தினமும் 1000 பக்தர்களுக்கும், பின்னர் 2 ஆயிரம் பக்தர்களுக்கும், மகரவிளக்கு பூஜை காலத் தில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதனால் பக்தர்கள் கூட்டத்துடன் காணப்படும் சபரிமலை இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் வெறிச் சோடி காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன் தினம் மகரஜோதி தரிசனம் நடந்தது. அன்றைய தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டிருந்ததால் அவர்கள் மட்டுமே மகரஜோதியை தரிசிக்க முடிந்தது. மகரஜோதி தெரிவதற்கு முன்னதாக பந்தளம் அரண்மனையில் இருந்து கொண்டுவரப்படும் திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டது.
மகரஜோதி தரிசனம் முடிந்ததும் திருவாபரணங்களுடன் ஐயப்பனை பக்தர்கள் தரிசிப்பார்கள். இன்றும், நாளையும் உச்ச பூஜை மற்றும் மாலை நேர பூஜையின் போது ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவித்து தீபாராதனை காட்டப்படும்.
கொரோனா காரணமாக இந்த ஆண்டு புஷ்பாஞ்சலி நடத்தப்படவில்லை. நாளை மாலை புஷ்பாஞ்சலி நடத்தப்படும் நேரத்தில் ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்படும். நாளை வரை திருவாபரணங்களுடன் ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்கலாம்.
நாளை மறுநாள் (18-ந் தேதி) வரை நெய் அபிஷேகம் நடைபெறும். வருகிற 19-ந் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். மகரவிளக்கு பூஜை முடிந்து வருகிற 20-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படுகிறது.