சசிகலா உயிருக்கு ஆபத்து : தம்பி திவாகரன்..

சசிகலா உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதோ என்று சந்தேகப்படுகிறேன்- தம்பி திவாகரன் பேட்டி

                                                       திவாகரன்
சசிகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பாக அவரது தம்பி திவாகரன் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் கூறியதாவது:-
சசிகலா வருகிற 27-ந்தேதி பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையாக இருந்தார். அவர் விடுதலையாக இருந்த நிலையில் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்குமோ என்று சந்தேகப்படுகிறேன். சசிகலாவுக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்துள்ள நிலையில் சிறையில் அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை.

நேற்று மாலையில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட பிறகுதான் சிறையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஜெயிலில் இருந்து சசிகலா வருகிற 27-ந்தேதி விடுதலையாக உள்ள நிலையில் அவருக்கு சரியாக சிகிச்சை தராமல் தாமதப்படுத்துகின்றனர்.

எங்களுக்கு துரோகத்திற்கு மேல் துரோகம் நடந்து வருகிறது. பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். தற்போது பணம் எதுவரை பாய்ந்தது என்று தெரியவில்லை.

சிறையில் இருந்த சசிகலாவுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன். மூச்சுத்திணறல் ஏற்பட்டால் சி.டி. ஸ்கேன் எடுத்து பார்த்து சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால் பரப்பன அக்ரஹார சிறை மருத்துவமனையில் சசிகலாவுக்கு சாதாரண எக்ஸ்ரே மட்டுமே எடுத்து பார்த்துள்ளனர். தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சி.டி.ஸ்கேன் எடுக்க கோர்ட்டு அனுமதி தேவை என்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் கூறியதாவது:-

சசிகலா சிகிச்சை பெறும் தனியார் ஆஸ்பத்திரியில் அவரை பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. டாக்டர்கள் மட்டுமே அவரை பார்க்க முடியும். அவர் பாதுகாப்பாக இருப்பதாகவே சொல்கிறார்கள்.

அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 12 மணிநேரத்துக்கு மேல் ஆகியும் சி.டி. ஸ்கேன் எடுக்கவில்லை. அவருக்கு முதல் தர மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட வேண்டும். அவருக்கு சி.டி. ஸ்கேன் எடுக்காமல் இருப்பது எங்களுக்கு பின்னடைவாக இருக்கிறது. அதில் ரிஸ்க் எடுக்கக்கூடாது. உடனடியாக அவருக்கு சி.டி. ஸ்கேன் எடுத்து பார்க்க வேண்டும்.

அங்கு சி.டி. ஸ்கேன் எடுக்க வசதி இல்லாவிட்டால் அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்றி அங்கு சி.டி. ஸ்கேன் எடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இப்போது அவர் எப்படி இருக்கிறார் என்பது எங்களுக்கு சரியாக தெரியவில்லை.

12 மணி நேரம் ஆகியும் சி.டி. ஸ்கேன் எடுக்கவில்லை என்பதால் அவருக்கு வேறு மருத்துவ சிகிச்சை தேவை என்று தான் அர்த்தம். எனவே அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்து டாக்டர்கள் முடிவு எடுக்க வேண்டும். சிகிச்சையில் எந்த பிடிமானமும் இல்லை. மருத்துவ ரீதியாக டாக்டர்களும் எதுவும் சொல்லவில்லை.

சசிகலாவை பார்க்கவும், அவருக்கு அளிக்கப்படும் பரிசோதனைகள் குறித்து தெளிவான தகவல் தெரிவிக்கவும் மருத்துவமனை நிர்வாகமும், போலீசாரும் மறுக்கிறார்கள்.

அனைத்துக்கும் முறையான நடைமுறை என்று சொல்லி சசிகலாவுக்கான சிகிச்சையை தாமதிக்கின்றனர். சசிகலாவுக்கு தாமதிக்காமல் உடனடியாக சி.டி.ஸ்கேன் எடுத்து பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சசிகலாவை அவரது உறவினர் டாக்டர் வெங்கடேஷ் மருத்துவமனையில் பார்த்துவிட்டு வெளியே வந்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

சசிகலாவை ஆஸ்பத்திரியில் பார்க்க சென்றபோது டாக்டர்களை பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை. நாங்கள் மருத்துவர்களை பார்க்க ரொம்ப நேரமாக முயற்சி செய்துகொண்டு இருக்கிறோம். சம்பந்தப்பட்ட டாக்டர்களை எங்களால் பார்க்க முடியவில்லை.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 12 மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. அவருக்கு மூச்சுத்திணறல் இருக்கிறது என்று கூறிய பிறகு சி.டி. ஸ்கேன் எடுத்திருக்க வேண்டும். அதுதான் டாக்டர்களின் பரிந்துரை. ஆனால் இந்த மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் வேலை செய்யவில்லை என்கிறார்கள். எதற்காக தாமதம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இங்கு முடியாது என்றால் அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்றி சி.டி.ஸ்கேன் எடுத்து இருக்கலாம்.

அவருக்கு சி.டி.ஸ்கேன் சீக்கிரம் எடுப்பது நல்லது. ஒவ்வொரு மணிநேரமும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதுதான் சூழ்நிலை. அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி எங்களுக்கு தெளிவான முறையில் தெரியப்படுத்தவும் இல்லை. அதுதான் எங்களின் ஆதங்கம்.

அவருக்கு கொரோனா பரிசோதனை செய்து கொரோனா இல்லை என்று எங்களுக்கு யாரும் தெரியப்படுத்தவில்லை. செவிவழி செய்தி வழியாகத்தான் எங்களுக்கு வருகிறது. கொரோனா நெகட்டிவ் என்று கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் சான்றிதழை பார்க்கவில்லை. அதை பார்க்காமல் நான் உறுதியாக சொல்ல முடியாது. யாராவது அதை எங்களுக்கு தெரிவித்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதற்காகத்தான் காத்து இருக்கிறோம்.

இங்கு சிகிச்சை சரியில்லை என்றால் அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது தொடர்பாக அதிகாரிகள் சிந்திக்கிறார்களா என்று தெரியவில்லை. அது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கிறது.