கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 395 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கள்ளக்குறிச்சி நகரத்தில் மட்டும் கடந்த 5 நாட்களில் 50 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி நகரத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட 16,17,18,19 ஆகிய வார்டுகளை தனிமைப்படுத்த பகுதியாக அறிவித்தது.
இதையடுத்து 4 வார்டுக்கு உட்பட்ட சேலம் மெயின் ரோடு, கவரைதெரு, பெருமாள் கோவில் தெரு, சிவன்கோவில் தெரு, கடைவீதி, அக்ரகார தெரு,கஸ்தூரிபாய் தெரு, கமலா தெரு, மந்தைவெளி உள்பட 16 இடங்களில் நேற்று தடுப்புகள் அமைக்கப்பட்டு அப்பகுதிகள் சீல் வைக்கப்பட்டன. மேலும் அப்பகுதியில் மருந்தகங்கள், மருத்துவமனை தவிர மற்ற கடைகள் அனைத்தும் திறக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் 4 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் காய்கறி கடைகள், மார்க்கெட், வணிக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.
இது தவிர போக்குவரத்து அதிகமுள்ள சேலம் மெயின் ரோட்டில் நான்கு முனை சந்திப்பில் இருந்து ஏமப்பேர் புறவழிச்சாலை வரை வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக அனைத்து வாகனங்களும் துருகம்சாலை ,காந்தி ரோடு வழியாக சென்றதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டாலும், சிலர் அந்த கட்டைகளுக்கு இடையில் நுழைந்து சென்றதை காணமுடிந்தது. காந்தி ரோட்டில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர். மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் அங்கு திரண்டதால் கொரோனா தொற்று மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கள்ளக்குறிச்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வந்த பகுதியில் முறையாக தடுப்புகள் அமைத்து கண்காணிக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்கறி மார்க்கெட் அருகே உள்ள அக்ரகார தெருவில் 2 மளிகைக்கடைகாரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அப்போதே மார்க்கெட்டை மூடியிருந்தால், தொற்று பரவி இருக்காது. அவ்வாறு மூடாததால் காய்கறி மார்கெட்டில் முட்டை கடை வைத்திருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அப்போதும் கூட முட்டை கடை மட்டும் தான் மூடப்பட்டது. காய்கறி மார்க்கெட்டில் உள்ள 300-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்படவில்லை. மார்க்கெட்டை மூடாத காரணத்தால்தான் தற்போது கள்ளக்குறிச்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கள்ளக்குறிச்சியில் கொரோனா தொற்று பரவிய பின்பு தற்போதுதான் மார்க்கெட் மூடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியது போன்று, இங்கு தற்போது கொரோனா பரவி வருகிறது. 4 வார்டுகள் சீல் வைக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.