ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்ட முன்கள பணியாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மல்லகுண்டாவை சேர்ந்தவர் கிருஷ்ணய்யா (வயது 50). இவர் பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார்.
திருப்பதியில் உள்ள எம்.ஆர். பள்ளி பஞ்சாயத்து அலுவலகத்தில் முன் களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இங்கு கடந்த 9-ந்தேதி காலை கிருஷ்ணய்யா கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்டார்.
பின்னர் அவரது வீட்டிற்கு சென்று விட்டார். அன்றிரவு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக மாறியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கிருஷ்ணய்யாவை உடனடியாக திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கிருஷ்ணய்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கிருஷ்ணய்யா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று டாக்டர் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.