குளிர் காலத்திலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி?

குளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி?

குளிர் காலத்தில் சருமத்திற்கு போதுமான ஈரப்பதம் கிடைக்காது. அதனால் இப்போது சருமம் வறண்டு போவது தவிர்க்கமுடியாதது. சருமத்தின் மேல் அடுக்கில் ஈரப்பதம் குறைவது, குளிர்ந்த சீதோஷ்ணநிலை நிலவுவது, சூடான தண்ணீரில் குளிப்பது, ஒவ்வாமை ஏற்படுவது, சோப்புகளை அதிகம் பயன்படுத்துவது போன்றவை வறண்ட சருமத்திற்கு காரணமாக இருக்கின்றன. அதனால் குளிர் காலத்தில் சருமத்தை பராமரிப்பதில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இப்போது சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைப்பதுதான் சரியான சரும பராமரிப்பு வழிமுறையாகும்.

சருமத்தை உலரவிடாமல் எப்படி பாதுகாப்பது என்பது குறித்து பார்ப்போம்!

* குளிர்காலத்தில் சருமத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாம். சூடான நீரில் ஒரு கப் ஓட்ஸ் போட்டு கால் மணி நேரம் கழித்து அதை உடலில் பூசி, சிறிது நேரத்தில் கழுவவும் செய்யலாம். தினமும் ஒரு கப் தரமான பால் பருகலாம். சருமத்திற்கு கற்றாழை ஜெல்லையும் உபயோகிக்கலாம். இவை வறண்ட சருமத்திற்கு நிவாரணம் அளிக்க உதவுபவை. சருமத்தில் நீர்ச்சத்தையும், ஈரப்பதத்தையும் தக்கவைக்கவும் துணைபுரிபவை.

* குளிர்காலத்தில் அதிக நேரம் குளிக்க கூடாது. ஐந்து முதல் 10 நிமிடங்களுக்குள் குளித்துவிடவேண்டும். உடல் உள் உறுப்புகளை போலவே வெளிப்புற சருமத்திற்கும் போதுமான அளவு நீர் தேவை. அதிக நேரம் குளிப்பது சருமத்திற்கு ஏற்றதல்ல. குறிப்பாக குளிர்காலத்தில் சூடான நீரில் தினமும் குளிப்பது சருமத்திற்கு நல்லதல்ல. 15 நிமிடங்களைவிட கூடுதல் நேரம் குளித்தால், சருமத்தின் எண்ணெய் அடுக்கு பாதிப்புக்குள்ளாகும். அதனால் சருமம் ஈரப்பதத்தை இழக்க நேரிடும். சருமம் வறண்டால் எரிச்சலும் ஏற்படும். வெளிப்புற அடுக்கின் செல்களும் சேதமடையும். அதிக சூடும், குளிர்ச்சியும் இல்லாத நீரில் குளிப்பதுதான் சருமத்திற்கு ஏற்றது.

* குளித்த பின்பும், கை, கால்களை கழுவிய பிறகும் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும். சருமத்தின் தன்மை மாறாமல் பாதுகாக்கவும் உதவும். மேலும் சருமத்திற்கு ஆரோக்கியம் தரும் திரவத்தை உறிஞ்சி சரும வளர்ச்சிக்கும் துணைபுரியும்.

* குளிர்காலத்திலும், கோடைகாலத்திலும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். ஏனென்றால் குளிர்காலத்தில் சூரியன் பூமிக்கு நெருக்கமாகவும் அதன் கதிர்கள் இன்னும் வலுவாகவும் இருக்கும். சன்ஸ்கிரீன் உபயோகிப்பதன் மூலம் சூரிய கதிர்வீச்சுகளால் சருமத்திற்கு ஏற்படும் சேதத்தை தவிர்த்துவிடலாம்.

* இப்போது குளியல் சோப் உபயோகிக்கும் விஷயத்திலும் கவனம் தேவை. சருமத்திற்கு பொருத்தமான சோப்பை தேர்ந்தெடுக்காவிட்டால் இயற்கையாகவே ஈரப்பதம் வழங்கும் எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாடுகளில் சீரற்ற நிலை உருவாகிவிடும். இதனால் சரும வறட்சி, எரிச்சல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

* சருமத்தின் இயற்கையான அழகை பேணுவதற்கு நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் பருகுவதுதான் சிறந்த வழியாகும். திரவ உணவுகளையும் அதிகம் சாப்பிட வேண்டும். அவை சருமத்திற்கு மென்மையையும், பிரகாசத்தையும் அளிக்கும்.

* கேரட், தக்காளி, ஸ்ட்ராபெர்ரி, நட்ஸ் வகைகள், பச்சை இலை காய்கறிகள் போன்றவை சருமத்திற்கு போதுமான ஊட்டச்சத்தை வழங்கக்கூடியவை. அவற்றை குளிர்காலத்தில் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வேண்டும்.