மத்திய அரசின் பி.எம்., கிசான் திட்டம் மூலம், சிறு, குறு விவசாயிகளின் வங்கி கணக்கில் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாயினை, மூன்று தவணையாக செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், விவசாயிகள் சேர்க்கையினை எளிமையாக்குவதற்காக நடப்பு ஆண்டின் துவக்கத்தில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஆனால், வேளாண்துறை உயரதிகாரிகள், கமிஷன் பெற்றுக்கொண்டு தங்களுடைய ஐ.டி., யினை வெளியில் விற்றனர்.
புரோக்கர்கள் மூலமாக பல்வேறு தனியார் கம்பியூட்டர் சென்டர்களுக்கு ஐ.டி., சென்றது. இதன் மூலம் விவசாயிகள் அல்லாத லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களுடைய வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டையினை கொடுத்து இத்திட்டத்தில் இணைந்து பயனடைந்தனர்.புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர். பகுதி நேர ஊழியர்கள் பலர் நிரந்த பணி நீக்கம் செய்யப்பட்டனர்.மேலும், புரோக்கர்கள், கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர்களை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து வருகின்றனர். தொடர்ந்து, தகுதியற்ற பயனாளிகள் கண்டறியப்பட்டு அவர்கள் பெற்ற தொகையினை, அரசின் வங்கி கணக்கிற்கு மாற்றும் பணி தினமும் நடந்து வருகிறது.இதில் பலருடைய வங்கி கணக்கில் போதிய பணம் இல்லாததால் அவர்களின் முகவரி, போன் நெம்பர் உள்ளிட்ட விபரங்கள் வங்கிகளில் இருந்து பெறப்பட்டு, வேளாண் மற்றும் வருவாய்துறையில் பணிபுரியும் கடை நிலை ஊழியர்கள் அவர்களின் வீட்டிற்கு சென்று பணத்தை செலுத்துமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான பொதுமக்களின் முகவரி யினை வைத்துக்கொண்டு, ஒவ்வொறு வீடாக ஏறி, இறங்கும் வேளாண், வருவாய்துறை ஊழியர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதில், பலரது தொடர்பு எண்கள் உபயோகத்தில் இல்லை. சிலரது வீடுகள் எங்கு உள்ளது என்றே தெரியவில்லை. குறிப்பாக, நாள் ஒன்றிற்கு 50 – 100 வீடுகளுக்கு சென்று இதைப்பற்றி கூறுவதற்குள், போதும் என்றாகி விடும். இவ்வாறு செய்வதன் மூலம் வேலைப்பளு அதிகரிக்கும்.மேலும், களப்பணியில் உள்ள அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை போட்டோ எடுத்து அனுப்ப வேண்டும், எத்தனை பேரை சந்தித்தோம் என்ற விபரங்கள், தங்கள் பகுதியில் உள்ள வங்கிகளில் தகுதியற்ற பயனாளிகளின் எண்ணிக்கை, மீட்கப்பட்ட தொகை உள்ளிட்டவற்றை தெரிவிக்க கோரி பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்த பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இதே முறையினை பின்பற்றினால் தகுதியற்ற பயனாளிகளிடம் இருந்து பணம் பெற பல மாதங்கள் தேவைப்படும்.தண்டோராஎனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஒரு வார காலத் திற்கு தினமும் காலை, மாலை என இரு வேலைகளில் பி.எம்., கிசான் குறித்த தகவலினை ‘தண்டோரா’ மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.தகுதியற்ற பயனாளிகள் யார் என்பது அவரவருக்கு நன்றாக தெரியும் என்பதால், குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பொதுமக்கள் தாமாக முன்வந்து பி.எம்., கிசானில் பெற்ற தொகையினை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிப்பதன் மூலம் அதிகாரிகளின் வேளைப்பளு குறையும். பணத்தை விரைவாக மீட்க முடியும்.