கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள குலதீபமங்கலம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் ராஜேஸ்வரி(வயது 7). இவள், அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். இவளும், பக்கத்து வீட்டை சேர்ந்த அய்யனார் மகள் வனிதா(3)வும் நேற்று மதியம் அதே தெருவில் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த தெருவில் பழுதான கார் ஒன்று பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த காரின் கதவை திறந்து, 2 சிறுமிகளும் உள்ளே சென்றனர். பின்னர் காரின் கதவை திறப்பதும், மூடுவதுமாக 2 பேரும் விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் உள்ளே இருந்த நிலையில் காரின் கதவு திடீரென ‘லாக்’ ஆகி விட்டது. இதனால் காரின் உள்ளே சிக்கி கொண்ட சிறுமிகளுக்கு கதவை திறக்க முடியவில்லை.
காரில் 4 கதவுகளின் கண்ணாடியும் காற்று உள்ளே புகாத வகையில் மூடப்பட்டிருந்தது. இதனால் 2 சிறுமிகளும் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அபயக்குரல் எழுப்பினர். ஆனால் காரின் கதவுகள் மூடப்பட்டு இருந்ததால், அவர்களது சத்தம் வெளியே கேட்கவில்லை. நேரம் செல்ல, செல்ல 2 சிறுமிகளுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் 2 பேரும் மயங்கி விழுந்தனர்.
இதற்கிடையில் மாலை வெகுநேரமாகியும் சிறுமிகள் வீட்டிற்கு வராததால் அவர்களது பெற்றோர் 2 பேரையும் தேடினர். அப்போது, அந்த தெருவை சேர்ந்த ஒருவர், 2 சிறுமிகளும் காரின் அருகில் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிவித்தார். உடனே அவர்கள், அந்த காரின் அருகில் சென்று பார்த்தபோது, 2 சிறுமிகளும் காருக்குள் மயங்கிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், கதறி அழுததோடு கூச்சலிட்டனர். அவர்களது சத்தம் கேட்டு, அந்த தெரு மக்கள் ஓடிவந்தனர். உடனடியாக காரின் கதவை திறந்து, உள்ளே இருந்த 2 சிறுமிகளையும் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே வனிதாவும், ராஜேஸ்வரியும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், மணலூர்பேட்டை இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.