கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள் நடந்து வருகிறது.
எதிர் வரும் சட்டசபை தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டு, தச்சூர் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
இதில், 2,080 கன்ட்ரோல் யூனிட், 2,730 பேலட் யூனிட், 2,250 விவிபாட் இயந்திரங்கள் வந்துள்ளது. மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களை ஸ்கேனிங் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் தொழில் நுட்ப பொறியாளர்கள் மூலம் கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட், விவிபாட் உள்ளிட்ட இயந்திரங்களில் முதற்கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில், ஏற்கனவே பதிவாகி இருந்த ஓட்டுகள் அழிப்பு, சின்னங்கள் அகற்றம் மற்றும்இயந்திரங்களில் பழுது உள்ளதா என்பது குறித்து சோதனை செய்யப்பட்டு வருகிறது.இப்பணிகளை சப் கலெக்டர் ஸ்ரீகாந்த் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், தேர்தல் தனி தாசில்தார் மணிகண்டன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் கமலம் ஆகியோர் உடனிருந்தனர்.அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளும் உடனிருந்தனர்.