கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட சித்தேரி தெரு, அகரத்தான் கொல்லைத் தெரு, கவரைத் தெரு, பெருமாள் கோவில் தெரு, ரஜபுத்திர தெரு, சுபேதார் தெரு, சிவன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு நகராட்சி மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில நாட்களாக மேடான பகுதியில் வசிப்பவர்களுக்கு குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வந்தனர். கடந்த10 நாட்களுக்கும் மேலாக இதே நிலை நீடித்தது.இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று காலை 7:00 மணியளவில் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
தகவல் அறிந்த நகராட்சி கமிஷனர் பாரதி, நேரில் சென்று அப்பகுதி பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், பற்றாக்குறையின்றி குடிநீர் கிடைப்பதற்கும், டேங்கர் மூலம் 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததைத் தொடர்ந்து அனைவரும் 7:30 மணியளவில் கலைந்து சென்றனர்.