கள்ளக்குறிச்சி கடை வீதியில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பால், அப்பகுதி மக்களுக்கு நேற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கடை வீதி பகுதியில் மீண்டும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில், ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மூவர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அதனையொட்டி, கள்ளக்குறிச்சி சுகாதாரத் துறையினர் கடை வீதி பகுதியில் கிருமி நாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளித்து தடுப்பு பணிகளை மேற்கொண்டனர். தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் வணிகர்கள் என 100க்கும் மேற்பட்டோருக்கு, மேலுார் வட்டார மருத்துவ அலுவலர் பங்கஜம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
வயது முதிர்ந்த, நடக்க முடியாத முதியோர்களுக்கு வீட்டிலேயே சென்று பரிசோதனை செய்யப்பட்டது.சுகாதார ஆய்வாளர்கள் சிட்டிபாபு, கவியரசன், மருந்தாளுநர் ராதா, ஆய்வக நுட்புனர் அழகேசன், துப்புரவு மற்றும் துாய்மைப் பணியாளர்கள், ஆர்.கே.எஸ்., சுகாதார பயிற்சி மாணவர்கள் உட்பட பலர் அப்பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும், சுகாதாரத் துறையினர், தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.