அபுதாபியில் பனிமூட்டம் காரணமாக அல் முகதாரா பகுதியில் அல் மப்ரக் செல்லும் சாலையில், திடீரென 19 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கின. இதில் ஒருவர் பலியானார். 8 பேர் படுகாயமடைந்தனர்.
இதில் நேற்று அபுதாபி அல் முகதாரா பகுதியில் அல் மப்ரக் பகுதியை நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதன் காரணமாக சாலையில் எதிரில் செல்லும் வாகனங்கள் முற்றிலும் ஓட்டுனரின் பார்வையில் மறைந்துள்ளது. இது குறித்த ரெட் அலர்ட் எனப்படும் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஓட்டுனர்களின் பார்வைத்திறன் 1 கி.மீ.க்கும் குறைவாக இருப்பதால் வாகனங்கள் 80 கி.மீ. வேகத்திற்கு மேல் செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த சாலையில் நேற்று காலை பஸ், லாரி, கார் என பலதரப்பட்ட வாகனங்கள் சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென ஒரு வாகனம் பிரேக் போட்டதால், பின்னால் வந்து கொண்டிருந்த வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றோடு ஒன்று பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மொத்தம் 19 வாகனங்கள் அடுத்தடுத்து முன்னால் உள்ள வாகனங்கள் மீது மோதியது. இதனால் ஏற்பட்ட விபத்தில் ஆசிய நாட்டை சேர்ந்த ஒருவர் பலியானார். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த அபுதாபி போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அவசர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், காலை 10.30 மணியளவில் அந்த பகுதியில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. காலை நேரங்களில் பனிமூட்டம் அதிகமாக நிலவுவதால் வாகனங்களில் செல்வோர் மிக கவனமாக செல்லவேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.