என்ஜினீயரிங் மாணவரிடம் பணம் பறிப்பு…

புதுவையில் என்ஜினீயரிங் மாணவரிடம் பணம் பறிப்பு

புதுவை புதுசாரம் நடுத்தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ராகுல் (வயது 20) காரைக்காலில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் 4-வது ஆண்டு படித்து வருகிறார். தற்போது கல்லூரி விடுமுறை என்பதால் புதுவைக்கு வந்துள்ளார். இந்தநிலையில் கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக ரூ.66 ஆயிரத்தை எடுத்து மொபட்டில் வைத்துக்கொண்டு சென்றுள்ளார்.

அவர் சாரம் வேலன் நகர் அருகே போகும்போது எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் அவரது மொபட் மீது மோதியது. இதில் ராகுல் நிலை தவறி கீழே விழுந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரில் ஒருவன், அவரது செல்போனை பறிக்க முயன்றுள்ளார். ஆனால் ராகுல் அதை தடுத்துவிட்டார். அப்போது மற்றொருவன் மொபட்டின் சாவியை எடுத்து இருக்கையின் கீழ் பகுதியை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.66 ஆயிரத்தை எடுத்து சென்றுவிட்டான்.
இது குறித்து ராகுல் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார். கல்லூரி மாணவர் மீது மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு, மர்மநபர்கள் பணத்தை பறித்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.