உலகம் அழியப் போகிறது : இளைஞரின் பேச்சால் பரபரப்பு…

எனக்கு ஆவி பிடித்துள்ளது, உலகம் அழியப்போகிறது எனக் கூறி கண்ணில் பட்டவர்களையெல்லாம் கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர். கைது செய்ய முயன்றபோது, ஒரு சப் இன்ஸ்பெக்டரையும், அந்த இளைஞர் கத்தியால் குத்தினார்.

 

சென்னை அருகே உள்ள உள்ளகரம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சுப்ரமணி என்பவர் தன் அறையை உள்ளே தாழிட்டவாறு திடீரென பேய் பிடித்தது போல் சத்தமாக சிரித்துள்ளார். அவரது உறவினர்கள் என்ன என்று கேட்ட போது, தனக்கு ஆவி பிடித்துள்ளதாகவும், உலகம் அழியப் போகிறது என்றும் கூறி சிரித்துள்ளார். இதனையடுத்து கதவை திடீரென திறந்து, வெளியே இருந்த தனது உறவினர்களை கத்தியால் சரமாரியாக தாக்கி விட்டு, சாலையில் ஓடியுள்ளார்.

சாலையில் சென்ற ஒரு ஆட்டோ மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த காவல்துறை துணை ஆய்வாளர் செல்வராஜ் என்பவர், அந்த இளைஞரை பிடிக்க முயன்றபோது, அவரையும் கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செல்வராஜ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து உஷாரான மடிப்பாக்கம் போலீசார், அந்த இளைஞர் சுப்ரமணியை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

நல்வாய்ப்பாக பொதுமக்கள் மீது சுப்ரமணி தாக்குதல் நடத்தும் முன்பே போலீசார் அவரை கைது செய்தனர். இதனையடுத்து, அவரை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்டு, அவர் அவ்வாறு நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.