பக்ரீத் பண்டிகை மற்றும் ஆடிப்பெருக்கு விழா அடுத்தடுத்த நாட்களில் வருவதால் கிராமங்களில் இறைச்சிக்கான ஆடுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத், இன்று கொண்டாடப்படுகிறது. நாளை
ஆடிப்பெருக்கு விழா வருகிறது. இந்த இரு பண்டிகைகளாலும் அசைவ உணவு முக்கிய இடம் பெறுகிறது. இதற்கு தேவையான ஆடுகளை கால்நடை சந்தைகளில் வாங்குவது வழக்கம்.கொரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளதால் கால்நடை சந்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் இறைச்சிக் கடை நடத்துபவர்கள் நேரடியாக கிராமங்களுக்குச் சென்று ஆடுகளை வளர்ப்பவர்களிடம் ஆடுகளை வாங்கி வருகின்றனர். இதில், இடைத்தரகர் இல்லாததால் கால்நடை வளர்ப்பவர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது.கடந்த ஒரு மாதமாக ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் இறைச்சி விற்பனை மந்தமாக உள்ளது.இந்நிலையில், இறைச்சி அதிகளவில் விற்பனையாகும் வகையில் இரு பண்டிகைகள் அடுத்தடுத்த நாளில் வருவதால் ஆடுகளை வாங்க கடைக்காரர்கள் கிராமங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.இதன் காரணமாக 5,000 ரூபாய்க்கு விற்கும் ஆடுகள் 6,000 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது.