அஞ்சல் துறை தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் -மத்திய அரசு அறிவிப்பு…

அஞ்சலக கணக்கர் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் -மத்திய அரசு அறிவிப்பு

அஞ்சல் துறையில் உள்ள அக்கவுண்டண்ட் (கணக்கர்) வேலைக்கான தேர்வுகள் வருகிற பிப்ரவரி 14-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் மட்டும் இடம் பெற்று தமிழ் மொழி இடம்பெறவில்லை.
தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு பல்வேறு தலைவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். தமிழ் மொழியில் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரியும் கூறியிருந்தார்.
இந்நிலையில், பிப்ரவரி 14ம் தேதி நடைபெற உள்ள அஞ்சலக சேவை கணக்கர் தேர்வுகளை ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளுடன் தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த தகவல் இந்தியா போஸ்ட் டுவிட்டர் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது. தமிழ்நாடு வட்டத்தில் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த தேர்வை ஆங்கிலம் அல்லது இந்தி அல்லது தமிழில் எழுதலாம் என கூறப்பட்டுள்ளது.